வராஹி

வராஹி



இந்த்த நாமத்தை கேட்டாலே பலருக்கு பயம் வரும். அப்படியான ஒரு அம்பிகை நாமம் தான் வராஹி. சப்த கன்னிகள் என்னும் எழுவரில் ஐந்தாமானவள். பஞ்சமி தாய் (ஆம் வாழ்வின் பஞ்சங்களை துரத்துபவள்).

வராஹியின் வரலாறு மொத்தமாக சப்த கன்னிகள் வரலாறு என்று பார்த்தால் ,அன்னை லலிதையால் பண்டாசுர வதத்தின் போது தோற்றுவிக்க அம்பிகையின் சக்தியால் அவள் உடலில் இருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள் தாம். ஆம், எப்படி கந்த கடவுள் சிவபெருமானிடம் இருந்து தோன்றினாரோ அது போன்று அம்பிகையிடம் இருந்து தோன்றிய நித்திய கன்னிகள் தான் சப்த கன்னியர் என்னும் ப்ராம்ஹி, மாகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராஹி, இந்த்ராணி மற்றும் சாமுண்டி.

இவர்களில் பெரிதும் மாறுப்பட்டவள் இந்த வராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள்.

இவள் லலிதையின் படைத்தலைவியாக, சேனாதிபதியாக போருக்கு சென்று வெற்றி வாகை சூடியவள். இவளது ரதம் கிரி சக்கர{காட்டு பன்றிகள் இழுக்கும்} ரதமாகும்.

கிரி சக்ர ரதாரூட தண்டநாதா புரஸ்கிருதா .

இவளுக்கு பல நாமங்கள் உள்ளன சேனநாதா , தண்டநாதா, வராஹி, பஞ்சமீ, கைவல்யரூபி , வீரநாரி, கிரியா தேவி, வார்த்தாளி( நீதி தேவதை - ஒறுத்து அளி என்பதாகும்), தூமாவதி(வடிவம்), பலிதேவதா ,ஸங்கேதா , ஸமயேஸ்வரி ,மகாசேனா , அரிக்னீ, முக்கியமாக ஆக்ஞாசக்ரேஸ்வரீ.

வராஹி ஸ்வரூபத்தில் ஸ்வப்ன வராஹி , அஷ்வாரூட வராஹி, ஆதி வராஹி , லகு வராஹி என பல உள்ளன. அவள் பல வண்ண உடைகள் அணிபவள் { ஒவ்வொரு வராஹியும் நீலம், சிவப்பு , மஞ்சள் என்று பல உடைகள் , பல ஆயுதங்கள்}

ஆனால் பொதுவாக மஞ்சள் உடையும் , முக்கியமாக கலப்பையும் , உலக்கையும் (வாக்கு தண்டம் என்றும் சொல்லுவார்கள் ஆக தண்டம் ஏந்த்தியவள்) கொண்டவள் . பல ஊர்களில் சிவன் கோவிலில் தென்முக கடவுளுக்கு எதிரில் வரிசையாக வீற்றிருப்பர்கள். நெல்லையப்பர் கோவில் வராஹி அதி அற்புதமாய் இருப்பாள். தஞ்சையில் பெரிய கோவிலில், தனியாக சந்நிதி அமைய பெற்றவள்.

ஆனைக்காவின் அம்மை ஜம்புகேஸ்வரி {அகிலாண்டேஸ்வரி அம்மை} வராஹி ஸ்வரூபமே. அது தண்டநாத பீடமாகும். ஆகவே தான் அன்னை அங்கே நித்திய கன்னியாக குடி கொள்கிறாள்.

கன்னிகள் நிலை என்பது தன்னுடைய சிவ சக்தியை அடையாத அம்பிகையின் வடிவமாகும். அது தாய்மைக்கும் முந்தய உன்னதமான நிலை.

சரி இவ்வளவு நேரம் அம்பிகையின் வடிவம் தோற்றம் பற்றி எல்லாம் சொல்லியாயிற்று . நம் விஷயத்துக்கு வருவோம் .. வராஹி உணர்த்தும் தத்துவம் என்ன ?? எதற்கு வராஹி என்று பார்ப்போமா ?

வராஹியை பற்றிய செய்திகளில் ஒன்று முக்கியமானது . வராஹி வராஹரின் சக்தி என்றும், எமனின் சக்தி(நீதி தெய்வம்) என்றும் சொல்ல படுகிறாள். அதில் வராஹ அவதாரத்தோடு சொல்லப்படும் செய்தி வராஹியின் தத்துவத்தை உணர்த்தி விடும் .



வராஹம் என்றால் என்ன ? பன்றி தானே , வராஹ மூர்த்தி பூமியை மீட்க அவதாரம் ஏற்ற போது அவருக்கு உதவியவள் இந்த வராஹி தான் . என்ன உதவி தெரியுமா ??

பன்றிக்கு இயல்பிலே வானை நோக்கும் சக்தி கிடையாது . எப்போதும் அது பூமியை பார்த்தே நடக்கும் ஒரு பிராணி. ஆனால் வராஹ அவதாரம் எடுத்த பெருமானுக்கோ பூமியை கடலில் இருந்து மீட்டு தன மூக்கி நுனியில் {அதாவது பூமியை ஒரு தூக்கு தூக்கி தலையை உயர்த்தி} வைக்க வேண்டும் ஆனால் கொண்ட உருவத்தின் இயல்பை {இயற்கையை} மாற்ற முடியாதல்லவா . ஆக அந்த உந்துதலுக்கு{உயர்த்துதலக்கு} உதவியவள் தான் வராஹி . ஆக அவள் உந்துதலுக்கு உரிய தெய்வம்.

சரி அங்கே உந்துதல் , தூக்கி உயர்த்துதல் எல்லாம் சரி , நாம் மக்கள் ஏன் அவளை வணங்க வேண்டும் ? நம்முடைய எதை அன்னை உயரத்தி தூக்க வேண்டும்??என்றால் பணமா, புகழா, அந்தஸ்தா என்றால் இல்லை அதற்கான விடை தான் மிக மிக நுட்பமானது. ஆம் நம்முடையகுண்டலினியை{ உயிர் சக்தியை } உயர்த்துபவளே வராஹி.

*ஆன்மீகதகவல்கள்* 0091-8939791843

எப்படி ஒருவன் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்தான் என்று சொன்னால் அவன் நன்றாக படித்தான் என்பது மறைபொருளாய் உள்ளதோ அது போல் குண்டலினி உயர்வால் நம்முடைய வாழ்வு தானாய் உயரும், ஆக வராஹி வழிபாடு நமக்கு நம்மை உணர்தலை, உயிரை உணர்த்துதலை பலனாய்த் தரும். சரி உயருதல் சரி , எங்கிருந்து உயரும் ? எங்கே செல்லும் ? என்றால் எப்போதும் முடங்கி கிடக்கும் மூலாதாரத்தில் இருந்து குண்டலினி எழுந்து ஆக்கினையை அடையும். அப்படியான ஒரு உந்துதலை தருபவள் வராஹி . ஆக ஆக்ஞாசக்க்ரேஸ்வரீ என்னும் நாமம் அன்னைக்கு பொருத்தம் தானே ?

இன்னும் இருக்கிறதே அன்னையின் சூட்சம வடிவத்தின் ரகசியம். அவள் கையில் வைத்துள்ள ஆயுதங்களில் முதன்மையானவை கலப்பையும்{ஏர்} மற்றும் தண்டம் ? கலப்பையின் வேலை என்ன மண்ணின் அடியில் {ஆழத்தில்} இருப்பதை எடுப்பதற்கு தானே , கிழங்கு முதலானவை எடுக்க, நிலத்தை சீர் செய்ய, அது போல் நாம் பாவம் செய்ய செய்ய அவை பதிவுகளாகி {இப்பிறவி என்று இல்லை கர்ம பயன்களும்- வினைப்பயன்} என கர்ம மணல்பரப்பின் உள்ளே ஆழத்தில் உள்ள கிழங்கான குண்டலினியை தோண்டி உயர்த்தவே கலப்பை ஏந்திய கையினாளாய் விளங்குகிறாள் அன்னை.

எழுந்த குண்டலினி மேல்வரவேண்டுமே அதற்கு தான் அதை தட்டி உயர்த்த கோல்{ தண்டம்} ஏந்தியவள் அன்னை ..

அன்னை லலிதையின் பிருஷ்ட{பின் } பாகத்தில் இருந்து தோன்றியவளாம். ஆம் மூலாதாரம் இருக்கும் இடம்,

ஆக சரி தானே அன்னையின் வடிவமும், அமைப்பும் ஆயுதங்களும்.

சரி குண்டலினி மேலேழுந்தால் என்ன லாபம் ? என்றால் உண்மையாக குண்டலினியை ஆக்கினையில் வைத்து தவம் செய்ய செய்ய எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறும், சொன்ன வாக்கு எல்லாம் பொன்னாகும் {வராஹி வழிபட்டால் வாக்கு பலிதம் நிகழும்} , எதிரிகள் குறைவார்கள்{அவர்களும் நம் நண்பர்களாகி விடுவர் – வராஹி வழிபாடுஎதிரிகளை வெல்லுவது} ஆம் இதற்கு பெயர் தான் அன்பால் வெல்லுவது. மேலும் குண்டலினி உயர்ந்தால் உங்களை யாராலும் வசியம் பண்ண முடியாது. துர்தேவதைகள் அண்ட முடியாது.

இதனால் தான் வராஹிகாரனிடம் வாதாடாதே என்பார்கள்.

இப்படி வராஹி வழிபாட்டின் பலன்தானே குண்டலினி எழுந்து நம்மை சாதாரண மனிதர் என்னும் படியில் இருந்து உயர்த்தி அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.

ஆனால் ஒரு விஷயம் வராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ள தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும்.

ஆனால் வராஹி துடியானவள். கூப்பிட்ட குரலுக்கு வருவாள். அவள் காயத்திரியான

ஓம் ஸ்யாமளாயே வித்மஹே

ஹல ஹஸ்தாய தீமஹி

தன்னோ வராஹி ப்ரசோதயாத்

என்னும் மந்திரத்தை கஷ்டம் வரும் போது என்று தான் இல்லை , எப்போதும் ஜெபியுங்கள் . அன்னை சடுதியில் மாற்றம் தருவாள். அவளை மனதார நினைத்தாலே அவளை அடையும் உபாயம் காட்டிடுட்வாள்.

வாழ்வில் வெற்றி அனைத்தும் தருவாள்.

அவளே பகிளாமுகி ,தூமாவதி என்று சொல்லுவார்கள் ..

ஆக வராஹி வழிபாட்டால்,வாழ்வின் உந்துதலையும் முக்கியமாக உயிரின் உந்துதலையும் அடையலாம், எதிரிகளை அன்பால் வெல்லலாம். வராஹியை வழிபடுவோம் வாழ்வில் ஏற்றம் காண்போம்