குரு தரிசனம் கோடி புண்ணியம்

குரு தரிசனம் கோடி புண்ணியம்!!!


குருப் பெயர்ச்சி என்பது நவகிரகங்களில் ஒருவரான குருபகவானின் சஞ்சாரத்தை ஒட்டி நிகழ்வது. அந்தப் பெயர்ச்சி காலத்தில் இவருக்கு வழிபாடு செய்து பலன் பெறுவது பக்தர்களின் வழக்கம். அவரவர் ஜாதக அமைப்புப்படி இந்த குருப் பெயர்ச்சி அளிக்கப்போகும் நன்மைகள், நன்மைகளல்லாதவற்றைப் பொறுத்து அவரவர் உரிய பரிகாரம் செய்து கொள்வதும் வழக்கம். இதே சமயத்தில் பல பக்தர்கள் சிவாலயத்திலுள்ள தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு வழிபாடு செய்து மகிழ்வார்கள். அதாவது, இந்த தட்சிணாமூர்த்தி, நவகிரக குருபகவானுக்கே குருவானவர் என்பது புராணத் தகவல். இந்த அடிப்படையில் இங்கே சில தட்சிணாமூர்த்தித் திருவுருவங்களையும் விவரங்களையும் பார்க்கலாம்...

தட்சிணாமூர்த்திக்குத்
தேர்த் திருவிழா
தட்சிணாமூர்த்தி தனிப்பெருங் கருணையோடு மூலவராகவும் உற்சவராகவும் அருளும் திருத்தலம், திருஇரும்பூளை. பூளை எனும் மரத்தை தலவிருட்சமாகக் கொண்டதால் இத்தலம் இவ்வாறு பெயர் பெற்றது. இத்தலத்தில் குரு பகவான் தேவகுருவாக அருள்கிறார். இவருக்கு 24 நெய் தீபங்கள் ஏற்றி உட்பிராகாரத்தை 24 முறை மௌனமாக வலம் வந்தால் குருபகவான் திருவருள் கிட்டும் என்பது ஐதீகம். இந்த தட்சிணாமூர்த்திக்கு தேர்த்திருவிழா நடப்பது, பொதுவாக வேறெங்கும் காணக்கிடைக்காத விசேஷம். கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 17வது கி.மீ தொலைவிலும் நீடாமங்கலத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் திருஇரும்பூளை அமைந்துள்ளது.

வசிஷ்டரிடம் உபதேசம்
பெற்ற குரு
பொதுவாக அமர்ந்த நிலையிலேயே காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, நின்ற நிலையில் அருளும் திருத்தலம் தென்குடித் திட்டை. இங்குள்ள வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில்தான் குருபகவான் இவ்வாறு நின்ற நிலையில் தோன்றுகிறார். பூலோகத்தில் பிரளயம் நிகழ்ந்தபோது, நீரில் மூழ்காமல், இரண்டு இடங்கள் மட்டுமே திட்டுகளாக நின்றன. சீர்காழியும் இந்த தென்குடித் திட்டையும்தான் அத்தலங்கள். ரிஷிகளில் முதல்வரான வசிஷ்டரிடம் குருபகவான் நின்ற நிலையில் உபதேசம் பெற்ற திருத்தலம் இது. இத்தலத்தில் அம்பிகை உலகநாயகிக்கும் வசிஷ்டேஸ்வரருக்கும் இடையில் குருபகவான் சந்நதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குருபகவானை வழிபட, சகலவிதமான தோஷங்களும் தானே விலகும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. தஞ்சாவூரிலிருந்து திருக்கருகாவூர் செல்லும் வழியில் தென்குடித் திட்டை உள்ளது.

வெளிப் பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி
சனகாதி முனிவர் நால்வருக்கும் அக்கினி தபசு என்ற முனிவருக்கும் பிரம்ம தீர்த்தத்தின் கரையில் தட்சிணாமூர்த்தியின் வடிவில் ஈசன் உபதேசம் செய்தது திருப்புறம்பியம் தலத்தில். இங்கே தட்சிணாமூர்த்தி வெளிப் பிராகாரத்தில் வீற்றிருந்து அருள் புரிவது வித்தியாசமான அமைப்பு. மாணிக்கவாசகப் பெருமான் தன் கீர்த்தித் திருவகவலில் ‘புறம்பியம் அதனில்...’ என இத்தலத்தை சிறப்பித்துப் பாடியுள்ளார். இத்தலத்தில் ஆறுமுகம் கொண்ட முருகப் பெருமானை குழந்தை வடிவில் இடையில் ஏந்தி அம்பிகை அருளும் சிற்பம் அற்புதமானது; கட்டாயம் தரிசிக்கப்பட வேண்டியது. இங்குள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் அப்படியே அவருடைய கல் விக்ரகத்துக்குள் உறிஞ்சப்படுவது இன்றளவும் நடைபெறும் அதிசயம். கும்பகோணத்திலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது, திருப்புறம்பியம்.

கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயில் வழியாகப் பூந்தோட்டம் செல்லும் பாதையிலுள்ள சிவானந்தேஸ்வரர் ஆலயத்தில், தட்சிணாமூர்த்தி வித்தியாசமான கோலம் காட்டுகிறார். சிவம்-சக்தி இணைந்த அர்த்தநாரீஸ்வர வடிவில் அவரை தரிசிக்கலாம். இந்தப் புதுமைக் கோலம், கோயிலின்
கருவறை விமானத்தில் அமைந்திருக்கிறது.

பிள்ளைத் தொண்டு வழிபாடு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது, மன்னார்கோயில். இங்குள்ள பெருமாள் கோயிலின் விமானத்தின் உச்சியில் தட்சிணாமூர்த்தி வழிபடப்படுவது இந்த வைணவக் கோயிலைப் பொறுத்தவரை அதிசயமே. தனிச் சந்நதி கொள்ளாமல், ஒரு கோபுரத்தில் வீற்றிருக்கிறார் இவர். இந்த குரு பகவான் கோபுரத்தின் மூன்றாவது மாடத்திலுள்ள சயன நிலைப் பெருமாள் சந்நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள விமானத்தில் அருள்கிறார். குழந்தை பாக்கியம் கிட்டப்பெறாத பெண்மணிகள் இத்தலத்தில் உள்ள பிள்ளைத் தொண்டு எனும் துவாரத்தின் வழியாக ஏறி இறங்குகின்றனர். தொடர்ந்து இரண்டு பௌர்ணமிகள் அவ்வாறு அவர்கள் செய்தால் மழலை வரம் கிட்டுகிறது என்பது நம்பிக்கை.

நாரதருக்கு நாதோபதேசம்
வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தியை தஞ்சாவூரில் உள்ள சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் தரிசிக்கலாம். இவர், வீணையேந்தியபடி யோக
நெறியை மேற்கொண்டு, அந்த வீணை நாதத்தில் மனமொருமித்த நிலையில் அருள்கிறார். நாரத முனிவருக்கு நாதோபதேசம் செய்த அருட்கோலம் இது. இசைக்கலைஞர்கள் இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட, அவர்களின் கலைத் திறன் மேன்மையடைகிறது. தஞ்சாவூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளி, கல்லணை செல்லும் வழியில் கண்டியூரை அடுத்த 3 கி.மீ. தொலைவில் மேலத்திருப்பூந்துருத்தி எனும் இடத்தில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில்
உள்ளது, திருப்பூந்துருத்தி.

ஆசைகளை விலக்கும் ஆசான்
மதுரையில் இருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் 110 கி.மீ. தொலைவில் உள்ளது கம்பம். இத்தலத்திலுள்ள காசி விஸ்வநாதர், கம்பராயப்பெருமாள் ஆலயத்தில் தட்சிணாமூர்த்தி யோக வடிவில் இடது கையில் கமண்டலத்துடன் தரிசனம் அளிக்கிறார். இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் வீண் ஆசைகள் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை. மேலும் இத்தலத்தில் முன்புறம் ஐந்து முகங்களோடும் பின்புறம் ஒரு முகத்தோடும் உள்ள ஆறுமுகப் பெருமானையும் தரிசிக்கலாம்.

பீடத்துக்கு அடியில் ஒரு கோடி மந்திரம்
தேனியிலிருந்து மதுரை செல்லும் வழியில் 7 கி.மீ. தொலைவில் அரண்மனை புதூரில் இறங்கி அங்கிருந்து வயல்பட்டி செல்லும் பாதையில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வேதபுரி. கோடிக்கணக்கான மூல மந்திரங்கள் எழுதப்பட்டு இத்தல 9 அடி உயர பிரஜா தட்சிணாமூர்த்தியின் பீடத்துக்கு அடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூலவரையும் விமானத்தையும் ஒன்றாக தரிசிக்கும் அமைப்பில் ஆலயம் உள்ளது. ஊறவைத்த கொண்டைக் கடலையை மாலையாக்காமல் அப்படியே சமர்ப்பிப்பது இத்தலத்தின் பிரார்த்தனை நடைமுறை.

27 படிகள் கடந்து தரிசனம்
ஈசன், நந்தியம்பெருமான், தட்சிணாமூர்த்தி மூவரையும் ஒருசேர புளியறையில் தரிசிக்கலாம். திருநெல்வேலியிலிருந்து 67 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம். ஈசனின் கருவறைக்கு நேர் எதிராக நந்தி. அதற்கு அடுத்து தெற்கு நோக்கி யோக தட்சிணாமூர்த்தியாய் குருபகவான். 27 நட்சத்திரங்களை குறிக்கும் 27 படிகளைக் கடந்து குருபகவானை தரிசிக்கலாம். இத்தலத்தில் நவகிரக சந்நதி கிடையாது. குருபகவானே தனிப் பெருங்கருணையோடு அருள்கிறார்.

ஈசனே குரு
திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் பாதையில் 17வது கிலோமீட்டரில் உள்ளது முறப்ப நாடு. நவ கயிலாயங்களில் 5வதாகத் திகழும் தலம் இது. இங்கு தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது. அதனால் இந்நதி தட்சிணகங்கை என போற்றப்படுகிறது. இத்தல ஈசன் கயிலாசநாதர், குருவின் வடிவாய் அருள்கிறார். நாய் வாகனத்துடன் காலபைரவராகவும் வாகனம் இல்லாத வீர பைரவராகவும் இரு பைரவர்கள்
இத்தலத்தில் அருள்வது விசேஷம்.

திருமால் தலத்தில் தட்சிணாமூர்த்தி
மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் சோழவந்தானை அடுத்து குருவித்துறை உள்ளது. குருபகவானின் தவத்தை மெச்சிய திருமால் சித்திரங்கள் நிறைந்த ரதத்தில் வந்து குருவின் பிரச்னையை தீர்த்ததால், சித்திர ரதவல்லப பெருமாள் என வணங்கப்படுகிறார். வைணவத் தலத்தில் குருபகவான் தனி சந்நதி கொண்டு அருள்வது அற்புதம். இந்த குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் ஊறவைத்த கொண்டைக்கடலையை மாலையாகக் கோத்து அணிவித்து அவரருள் பெறுகின்றனர்.

ஆலமரத்தடி குருபகவான்
காரைக்குடியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பட்டமங்கலம். இத்தலத்தில் குருபகவான் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்கிறார். இத்தலத்தில் மட்டுமே ஆலமரத்தடியில் அமர்ந்த குருபகவானை தரிசிக்கலாம். இங்குள்ள ஐம்பொன்னாலான குருபகவானின் திருவுருவை குருப்பெயர்ச்சி மற்றும் விசேஷ நாட்களில் மட்டுமே தரிசிக்க முடியும். சாபத்தால் காளியான உமையவளை, ஈசன் தட்சிணாமூர்த்தி வடிவாக வந்து ஆட்கொண்டு அழகுசௌந்தரியாக்கி சாபவிமோசனம் தந்த தலம் இது. வியாழக்கிழமைகளில் இந்த தட்சிணாமூர்த்தியை 108 முறை வலம் வந்து வணங்க கிட்டாதது ஏதுமில்லை.

உத்கடி ஆசனம்
காஞ்சிபுரத்திலிருந்து வடக்கே 30 கி.மீ. தொலைவிலும் அரக்கோணத்திலிருந்து தெற்கே 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது, தக்கோலம். தொண்டை நாட்டிலுள்ள பஞ்சபூதத் தலங்களுள் அப்புத் தலமாக இது விளங்குகிறது. இத்தல உட்பிராகாரத்தில் ஆலமர் கடவுளாகிய தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின் கீழ் ஒரு காலை பீடத்தில் இருத்தி வைத்துக் கொண்டு வலப்புறக் காலை தரையில் வைத்து யோக தட்சிணாமூர்த்தியாய் அருள்கிறார். வலக்கரத்தில் ருத்ராட்ச மாலையையும் இடக்கரத்தில் தாமரை மொட்டினையும் ஏந்தியுள்ளார். தலையைச் சற்று சாய்த்து உத்கடி ஆசனம் எனும் நிலையில் பேரழகுடன் தரிசனம் அளிக்கிறார்.

கால்மாறி அமர்ந்த தட்சிணாமூர்த்தி
திருநெல்வேலியிலிருந்து 44 கி.மீ. தொலைவிலும் அம்பாசமுத்திரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது பிரம்மதேசம். இங்குள்ள கைலாசநாதர் ஆலயத்தில் மதுரையில் பாண்டிய மன்னனுக்காக கால் மாறி ஆடிய நடராஜரைப்போல, இங்கே தட்சிணாமூர்த்தி கால் மாறி அமர்ந்து காட்சியளிக்கிறார். இத்தலத்தில் 7 அடி உயரமுள்ள அற்புதமான பிட்சாடனரைத் தரிசித்து மகிழலாம். இத்தல மரமான 900 வயது கடந்த இலந்தை மரத்தில் பழுக்கும் பழங்களை பிரசாதமாக உண்டால் கணவன்- மனைவி ஒற்றுமை ஏற்பட்டு இல்லறம் இனிப்பதாக ஐதீகம்.

சிம்ம தட்சிணாமூர்த்தி
மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது பாமணி. இங்குள்ள நாகநாதர் ஆலயத்தில் நான்கு சிங்கங்கள் தாங்கும் மண்டபத்தில் சிம்ம தட்சிணாமூர்த்தியாக அருள்புரிகிறார் குருபகவான். சிம்மம், கும்பம், கடகம், தனுசு, மேஷம், விருச்சிக ராசிக்குரியவர்களும் அந்த லக்னங்களுக்குரியவர்களும் இந்த தட்சிணாமூர்த்தியை வழிபட வாழ்வு வளம் பெறும் என்பது ஐதீகம்.

குருபலன் அருளும் குரு
கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாளுக்கு தென்கிழக்கில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருலோக்கி. இங்குள்ள சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்திருக்கும் வடிவில் பின்புறம் சிவலிங்கம் துலங்க, நின்றபடி, கைகளை கும்பிட்ட நிலையில் ருத்ராட்ச மாலை, கமண்டலம் ஏந்தி குருபகவான் அருள்கிறார். திருமணம் செய்ய குரு பலனுக்காகக் காத்திருப்பவர்கள் இவரை வணங்க அவர்களுக்கு குருபலன் கிட்டி திருமணம் நடக்கிறது. சித்திரை மாத அவிட்ட நட்சத்திரத்தில் இவருக்கு சிறப்பு
வழிபாடுகள் நடக்கின்றன.

தேவ மயிலும் அசுர மயிலும்
அறுபடை வீடுகளில் 2வது, திருச்செந்தூர். இது தொன்மை வாய்ந்த ஒரு குருத்தலம். வியாழன் எனும் குருபகவான் முருகனின் சந்நதிக்கு முன் உள்ள பீடத்தில் அமர்ந்து முருகனிடம் சூரபத்மனின் வரலாற்றைக் கூறினார். எனவே இது குருத் தலம் எனப்படுகிறது. முருகப் பெருமானின் திருமுன் தேவ மயிலையும் அசுர மயிலையும் காணலாம். இந்திரன் அளித்த மயிலான இந்திர மயில்தான் தேவ மயில். சூரனை வதைத்து அவனை இரு கூறாகப் பிளந்து ஒன்றை சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றினார். இந்த மயில்தான் அசுர மயில்