பிறப்பும் இறப்பும்

Birth and Death
பிறப்பும் இறப்பும் !!!

1. ஒரு நல்ல பழக்கமாக, நேர்மையாக உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்: "நான் ஏன் பிறந்தேன்?". இந்தக் கேள்வியைத் தினந்தோறும் காலையிலும், மதியத்திலும், இரவிலும் உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.
2. நம் பிறப்பும் இறப்பும் ஒன்றுதான். ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கமுடியாது. மக்கள் இறப்பின் போது அழுவதையும் துக்கப் படுவதையும், பிறப்பின் போது மகிழ்ந்து பூரிப்பதையும் பார்க்கும் போது கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. இது தவறான கருத்து. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செய்கை. அழவேண்டுமென்றால் பிறக்கும் போது அழுவதே சரியானது. ஏனென்றால் பிறப்பில்லாமல் இறப்பில்லை. புரிகிறதா உங்களுக்கு?
3. தாயின் வயிற்றில் இருப்பது எப்படியிருக்கும் என்று மனிதர்கள் உணர்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஓ! அது எவ்வளவு வசதியற்றதாக இருக்கும்! ஒரு குடிசையில் ஒரு நாள் தங்குவதே மிகவும் கடினமாக இருக்கிறது. அதுவும் கதவு சன்னல்களை மூடிவிட்டோமானால் மூச்சு விடவே முடிவதில்லை. பின் தாயின் வயிற்றில் ஒன்பது மாதம் கழிப்பது என்பது எப்படி இருக்கும்? இருந்தாலும் தலையை மறுபடியும் அங்கேயே நுழைக்கப் பார்க்கின்றோம், கழுத்தை மீண்டும் சுருக்கில் மாட்டிக் கொள்ளவே விரும்பு கின்றோம்.
4. நாம் ஏன் பிறந்தோம்? மறுபடியும் பிறக்காமல் இருப்பதற்காகவே நாம் பிறவி எடுத்துள்ளோம்.
5. மரணத்தைப் புரிந்து கொள்ளவில்லையென்றால், வாழ்க்கையே குழப்பமாகத்தான் தோன்றும்.
6. புத்தர் அவருடைய சீடர் ஆனந்தரிடம் 'நிலையாமையை'ப் பார்க்கச் சொன்னார். ஒவ்வொரு மூச்சிலும் மரணத்தை பார்க்கச் சொன்னார். மரணத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்; வாழ்வதற்காகச் சாகவேண்டும். அப்படியென்றால் என்ன? இறப்பதென்றால் நம் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் முடிவு கண்டு நிகழ் காலத்தின் உண்மையான நிலையில் இருப்பது தான். நாம் நாளைக்கு இறக்க முடியாது; இப்போதே இறக்க வேண்டும். உங்களால் செய்ய முடியுமா? முடியுமென்றால் கேள்விகளே இல்லாத அமைதி உங்களுக்குத் தெளிவாக விளங்கும்.
7. அடுத்த மூச்சு எப்படி அருகில் இருக்கிறதோ, அதே போலத்தான் மரணமும் அருகிலேயே இருக்கிறது.

8. நீங்கள் முறையான பயிற்சி பெற்றிருந்தீர்களென்றால், நோய்வாய்ப்படும் போது அச்சப்பட மாட்டீர்கள், யாராவது இறக்கும் போது துயரப்பட மாட்டீர்கள். மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குப் போகும்போது மனதில் ஒரு தீர்மானம் செய்து கொள்ளுங்கள் - உடல் சரியானால் நல்லது, மாறாக இறந்தாலும் அதுவும் நல்லதே என்று. நான் உறுதியாகச் சொல்கிறேன். மருத்துவர்கள் என்னிடம் உங்களுக்குப் புற்று நோய் உள்ளது, சில மாதங்களில் இறந்து விடுவீர்கள் என்று சொன்னால், அவர்களுக்கு நான் நினைவு படுத்துவேன், "கவனமாய் இருங்கள், ஏனென்றால் உங்களையும் ஒருநாள் மரணம் தழுவ வரும். யார் முதலில் போவார், யார் பிறகு போவார் என்பது தான் இப்போதைய கேள்வி." மருத்துவர்கள் மரணத்தைக் குணப்படுத்தப் போவதும் இல்லை, மரணத்தைத் தடுக்கப் போவதும் இல்லை. புத்தர் ஒருவர் தான் அப்படிப்பட்ட மருத்துவர். பின் புத்தருடைய மருந்தைப் பயன்படுத்த நீங்கள் ஏன் முன்வரக் கூடாது?

9. நீங்கள் நோய்க்குப் பயந்தாலும், மரணத்திற்குப் பயந்தாலும் அந்த பயம் எங்கிருந்து வருகிறது என்று சிந்தித்துப் பாருங்கள். எங்கிருந்து வந்தது அந்தப் பயம்? பிறப்பிலிருந்து வந்தது தான். அதனால் யாராவது இறந்தால் வருத்தப்படாதீர்கள் - அது இயற்கை. இந்த வாழ்க்கையில் இறந்தவரின் துயரம் முடிந்து விட்டது. நீங்கள் வருத்தப்பட வேண்டுமானால் யாராவது பிறக்கும் போது வருத்தப்படுங்கள்: "அட! மறுபடியும் வந்து விட்டான். மறுபடியும் துக்கம் அனுபவித்து மரணமடையப் போகிறான்!"
10. காரணத்தினால் தோன்றும் பொருள் எல்லாம் நிலையற்றவை என்று "அனைத்தும் புரிந்த அந்த ஒருவனுக்குத்" தெளிவாகத் தெரியும். அதனால் அந்த "அனைத்தும் தெரிந்தவன்" மகிழ்வதும் இல்லை; வருந்துவதும் இல்லை. ஏனெனில் மாறிக்கொண்டிருக்கும் நிலைமைகளை அவன் தொடர்வதில்லை. மகிழ்ச்சியடைவது பிறப்பதற்குச் சமம்; சோர்வடைவது இறப்பதற்குச் சமம். இறந்த பிறகு மறுபடியும் பிறக்கின்றோம். பிறந்ததால் மறுபடியும் இறக்கின்றோம். நொடிக்கு நொடி பிறப்பதும் இறப்பதும் தான் முடிவற்றுச் சுழன்று கொண்டிருக்கும் சம்சார சக்கரமாகும்