தேங்காய் உடைப்பது ஆலயங்களில்ஏன் ?

தேங்காய் உடைப்பது ஆலயங்களில்ஏன் ?

பருப்பில்லாமல் கல்யாணமா என்பதைப் போல், தேங்காய் இல்லாமல் வேண்டுதலா எனக் கேட்கலாம். காலம்காலமாகத் தேங்காயை உடைத்து இறைவனுக்குப் படைக்கின்றனர். இதற்கு ஆன்மிகத்தில் தோய்ந்த பெரியவர்கள் பலரும் பல விளக்கங்களை அளித்துள்ளனர்.

அந்த விளக்கங்கள் எல்லாவற்றிலும் இருக்கும் பொதுவான தன்மை, தேங்காயை உடைத்தவுடன் அதன் உட்பகுதியைப் போல் வெண்மையான மனதோடு இறைவனை நான் வழிபடுகிறேன் என்பதற்கான குறியீடாகவே தேங்காயை உடைத்து இறைவனுக்குப் படைக்கிறோம் என்பதாகும்.

தேங்காயின் மேல்பகுதி ஓடுதான் நம்முடைய அகங்காரம். தான் என்னும் அகங்காரத்தைக் களைந்தால்தான் இறைவனாகிய அவனுடைய அருளைப் பெற முடியும் என்னும் தத்துவ விளக்கமே பெரும்பாலான அருளாளர்களால் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் தேங்காய் உடைப்பதை, உலக மாயையாகிய ஓடைக் கடந்துதான் இறைவனின் அருளைப் பெற முடியும் என்று விவரிக்கின்றனர்.

ஜீவாத்மா, மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. தேங்காயின் உள்ளே இருக்கும் மென்மையான உள்பகுதியையும், நீரையும் மூடி, அவற்றை நாம் எடுக்கமுடியாமல் ஓடு தடுக்கின்றது. தேங்காயை உடைப்பதன் மூலம் ஜீவாத்மா, பரமாத்மாவுக்கு இடையேயான தடை விலகுகிறது.

அதற்கு நம்மை மனதளவில் ஒவ்வொரு முறையும் தயார்படுத்திக்கொள்வதற்கான ஏற்பாடே, இறைவனுக்குத் தேங்காயை உடைத்துப் படைப்பதன் அர்த்தம் என்பவர்களும் உண்டு.