சந்திர வழிபாடு

வித்தியாச வழிபாடுகள் !!!


சந்திர வழிபாடு

சந்திர வழிபாடு
சிதம்பரத்திலிருந்து 28 கி.மீ. தொலைவிலுள்ள மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அருளும் லிங்கமூர்த்தியை கிரகங்கள் தினமும் வழிபடுவதாக ஐதீகம். அதனால் இந்த ஈசனுக்கு ஞாயிறு-சிவப்பு, திங்கள்-வெள்ளை, செவ்வாய்-சிவப்பு, புதன்-பச்சை, வியாழன்-மஞ்சள், வெள்ளி-வெள்ளை, சனி-நீலம் என ஒவ்வொரு நாளும் அந்தந்த கிரகத்துக்குரிய வண்ண ஆடை அணிவிக்கப்படுகிறது. ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேக தினத்தன்று இரவில் சந்திரன் தன் கிரணங்களால் இந்த ஈசனை வழிபடுகிறான்.

சூரிய வழிபாடு

மதுரை-பொன்னமராவதி வழியில் பிரான் மலையில் உள்ளது மங்கைபாகர் கோயில். இம்மலை மூன்று அடுக்குகளைக் கொண்டது. கீழ் அடுக்கில் அம்பிகை குயிலமுத்து நாயகியுடன் கொடுங்குடி நாதராகவும் மத்தியில் விசாலாட்சியுடன் விஸ்வநாதராகவும் மேல் அடுக்கில் தேனாம்பிகையுடன் மங்கைபாக நாதராகவும் ஈசன் காட்சி யளிக்கிறார். மங்கைபாகர் சிலை நவ மூலிகைச் சாறு கொண்டு செய்யப்பட்டதாகும். எனவே அவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. ஒரு நாளில் பலமுறை அலங்காரம் செய்தாலும் ஒவ்வொரு முறையும் புத்தாடையையே அணிவிக்கின்றனர். இந்த ஈசனின் திருமேனியை ஐப்பசி முதல் பங்குனி வரை தன் ஒளியால் தீண்டி சூரியன் வழிபடுகிறான்.

பிறந்தநாள் வழிபாடு
புதுச்சேரியிலுள்ள வேதபுரீஸ்வரர் கோயிலில் பிறந்தநாள் கொண்டாடும் பக்தர்கள் அன்றைய தினம் ஒரு வித்தியாசமான வழிபாட்டைச் செய்கின்றனர். தங்கள் ஜென்ம நட்சத்திர தினத்தன்று அக்கோயிலுக்குச் சென்று, அவர்கள் பிறந்த அதே நட்சத்திரத்தில் பிறந்த நாயன்மார்களுக்கு அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள். இதன்மூலம் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த சாதனையாளர்களாக உருவாகலாம் என்றும் நம்புகிறார்கள். வேத சாஸ்திரம் கற்க விரும்புவோர் இந்த வேதபுரீஸ்வரரை வழிபட்டு பின்னரே ஆரம்பிக்கின்றனர்.

கைதட்டு
கேரளம்- குருவாயூர் பக்கத்தில் உள்ள மம்மியூரிலுள்ள நாராயண குளங்கரா கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் பலமாக சிரித்துக் கைகளைத் தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தபடி சாமி கும்பிடுகின்றனர். சுவாமி முன் நிற்கும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை மனதில் நினைத்தபடி கைதட்டி சத்தமாக சிரிக்கின்றனர். இதனால் தங்கள் பிரார்த்தனைகளை சுவாமி நிறைவேற்றுவார் என்பது அவர்கள் நம்பிக்கை.

பத்தடி
புதுக்கோட்டை-மதுரை சாலையில் திருமயத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது, ராங்கியம். இங்கு உறங்காப்புளி கருப்பண்ணசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு வருவோர், சாமி கும்பிட்டு விட்டு சட்டென திரும்பாமல், பத்தடி பின்னால் வந்துதான் திரும்ப வேண்டும். அதோடு சந்நதியில் சத்தமும் போடக்கூடாது. பெண்கள் சந்நதிக்குள் செல்லக்கூடாது. இங்குள்ள சப்பாணி சந்நதி முன் எரிக்கப்பட்ட விறகு கட்டை சாம்பல் உள்ளது. அதைப் பூசிக்கொண்டு, வீட்டிற்கும் சிறிதளவு எடுத்து வந்து பூஜையறையில் வைத்தால் எப்படிப்பட்ட பிரச்னையும் தீர்ந்து விடும் என்கிறார்கள்.