மந்திராலயம் பற்றி ஜீவநாடி

மந்திராலயம் பற்றி ஜீவநாடி

மந்திராலயத்தில் எவர் ஒருவர் 72 மணி நேரம் தங்கி தியானம் செய்கிறாரோ

அவர் பல சித்திகளை அடைகிறார். அது மட்டும் அல்லாமல் ஸ்ரீ

ராகவேந்திரரின் தரிசனத்தையும் பெறுகிறார் என ஸ்ரீ ஞானஸ்கந்தர்

ஜீவ நாடியில் வந்துள்ளது. அங்கு செல்பவர்கள் பின்வரும் இடங்களையும்

தரிசனம் செய்யலாம்.

ராகவேந்திரர் பிருந்தாவனம்: 339 வருடங்களுக்கு முன்னர் 1671-ல் ஜீவசமாதி

அடைந்த மகான் ராகவேந்திரரது பிருந்தாவனம். முஸ்லிம் மன்னரே

ராகவேந்திரருக்கு விருப்பமான இடமான மாஞ்சலம்மா என்பவரிடம் இருந்து

பெற்றுத் தந்த இடம். அருகில் துங்கப்பத்ரா நதி ஓடும் அருமையான தலம்.

இன்றும் பல பக்தர்களுக்கு பலவிதமான அதிசயங்கள் நிகழும் இடம்.

ராகவேந்திரரது பாதுகைகள் : 339 வருடங்களாக ராகவேந்திர சுவாமி

தமது கால்களில் அணிந்து ஆசீர்வதித்து கொடுத்த பாதுகைகள்

பரம்பரை பரம்பரையாக ஒருவரது வீட்டில் உள்ளது. பாலாஜி மந்திருக்கு

அருகில் இவ்வீடு உள்ளது.

பாலாஜி மந்திர் : ராகவேந்திரர் தமது திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்து

வழிபட்ட வெங்கடசபெருமாள் கோவில் ராகவேந்திரர் பிருந்தாவனத்தின்

வடகிழக்கு திசையில் உள்ளது. அவர் நட்ட பூச்செடிகள் பச்சை பசேலென

பூத்துக் குலுங்கும் அதிசயத்தை இன்றும் காணலாம்.

ராமலிங்கசுவாமி திருக்கோயில் : இதுவும் ராமர் ஸ்தாபித்து வழிபட்ட

சிவன் கோவிலாகும். எனவே ராமலிங்க சுவாமி எனப்படுகிறார். 3 அடி உயர

பிள்ளையாரும், மற்றொரு லிங்கமும் இத்திருக்கோயிலின் காலத்தை நமக்கு

பறைசாற்றுபவையாகும்.

வீரபத்திரர் திருக்கோயில்: ராமலிங்கசுவாமி திருக்கோயிலை அடுத்து உள்ளது.

4 அடி உயர வீரபத்திரர் கம்பீரமாக காட்சி அளிக்கிறார். அஷ்டமி, பவுர்ணமி

நாட்களில் வெற்றிலை மாலை பிரபைகள் வைத்து அலங்காரம் செய்து சிறப்பு

வழிபாடுகள் செய்யப்படுகிறது.

ஆஞ்சநேயர் கோயில்: பாலாஜி மந்திரிலிருந்து பஸ் ஸ்டாண்ட் வருவதற்கு

வலதுபுறம் திரும்பும் இடத்தில் உள்ளது. மிகப்பழமையான ஆலயம்.

ஆஞ்சநேயரின் வாலில் மணியுடன் அபயஹஸ்தத்துடன் காட்சி அளிக்கிறார்.

முன்புறமுள்ள தூண்களில் சிவன், விஷ்ணு உருவங்கள் அழகாக

செதுக்கப்பட்டுள்ளன.

பஸ்ஸாவரம் ஷீரடி பாபா கோவில் : ரெயில் நிலையத்தில் இருந்து ராகவேந்திரர்

பிருந்தாவனம் செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் பஸ்ஸாவரத்தில்

சாலையின் வலது புறத்தில் உள்ளது.

மாதவரம் ராமர் அமர்ந்த கல்: ரெயில் நிலையத்தில் இருந்து மந்திராலயம்

செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தூரத்தில்

சாலை வலதுபுறம் திரும்பும்போது இடதுபுறத்தில் சிறிது தொலைவில்

தகரக்கொட்டகை ஒன்று தெரியும். அதுவே ராகவேந்திரர் பிருந்தாவனத்தில்

அமர்ந்து ஜீவ சமாதியானபோது அமர்ந்த கல்லின் மற்றொரு பாதியாகும்.

இதன் மீதுதான் ராமர் இவ்வழியே செல்லும்போது அமர்ந்தார் என்று கூறி

இக்கல்லையே ராகவேந்திரர் எடுத்துவரச் செய்து அதன் மீது அமர்ந்து

பிருந்தாவனம் எழுப்பச் செய்தார். அதன் ஒரு பகுதியே இங்கு ஆஞ்சநேயர் சிலை

வடிக்கப்பட்டு தற்போது சிறிய கோவிலாக உள்ளது.

மாதவரம் லக்ஷ்மி நரசிம்மர் கோயில்: ரெயில் நிலைத்தில் இருந்து மந்திராலயம்

செல்லும் வழியில் ராய்ச்சூர் கூட்ரோட்டை அடுத்து சிறிது தொலைவில்

சாலையின் இடதுபுறம் உள்ளது. பல காலங்கள் பூமிக்கடியில் புதைந்து

கிடந்த நரசிம்மர் சிலை, தற்போது மிகச்சிறப்பான கோயிலாக

கட்டப்பட்டுள்ளது.