கண் பார்வை குறை நீங்க… எண்கண் முருகன்

கண் பார்வை குறை நீங்க… எண்கண் முருகன்!

எண் பார்வையில் கோளாறு, செவ்வாய் தோஷம்,
கண்நோய் போன்ற பிரச்னைகளை நிவர்த்திக்கும்
தலமாக விளங்குகிறது எண்கண் திருக்கோயில்!

முருகப்பெருமானின் இந்த எண்கண் திருத்தலம்
திருவாரூர், கொடவாசல் வட்டத்தில் உள்ள முகுந்தனூருக்கு
அருகில் உள்ளது.

அசுரன் சூரபத்மனை வதம் செய்ய அன்னை உமாதேவி
வேலவனுக்கு வேல் வழங்கிய தலம் “சிக்கல்’ என்பார்கள்.

கந்தசஷ்டி திருவிழாவின்போது வேல் வழங்கும்விழா
சிக்கலில் சிறப்பாக நடைபெறும்.

வேல் வாங்கவரும் முருகன் திருமுகத்திலிருந்து வியர்வை
துளிர்த்து விழுவதை காணமுடியும். ஐந்து உலோகங்களைக்
கலந்து முருகனின் இந்த அற்புத உற்சவத் திருமேனியை
உருவாக்கிய சிற்பி, சிற்ப சாஸ்திரங்களில் நுணுக்கங்களை
நன்கு அறிந்து தேர்ச்சி பெற்றவர்.

சோழ மன்னரின் கீழ் குறுநில மன்னராய் ஆண்டுவந்த
முத்தரையரின் கீழிருந்தது இப்பகுதி. சிற்பி இத்தகைய
அற்புதச் சிலை போல் வேறு எவருக்கேனும் செய்து கொடுத்து
விடக்கூடாது என்று கருதிய மன்னன் சிற்பியின் வலக்கை
கட்டை விரலைத் தானமாகப் பெற்று விடுகிறான்.
ஆனால், சிற்பியின் எண்ணமும் விருப்பமும் வேறாக இருந்தன.

உலோகத்தில் செய்த உற்சவ திருமேனிபோல் உயிரோட்டம்
மிக்க கற்சிலையை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஜீவ சரீரமும் ரத்தம் போன்ற ரேகைகள், நீலமும் கருமையும்
கலந்த கல்லைத் தேர்ந்தெடுத்து, நல்ல முகூர்த்த நேரத்தில்
முருகனை தனது சிந்தையில் நிறுத்தி, ஆறுமுகமும்
பன்னிரெண்டு திருக்கரங்களும் கொண்ட ஆறுமுகக் கடவுளின்
திருமேனியை உருவாக்கினார்.

ஆறு திருமுகங்களும் பன்னிரெண்டு திருக்கரங்களோடு மயில்
மீது அமர்ந்திருக்கும் மூர்த்திக்கு மயிலின் இரண்டு கால்களே
ஆதாரமாய் அமைந்திருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.

இந்த தெய்வீகச் சிலையை நாம் இப்போதும் எட்டுக்குடி
திருத்தலத்தில் (திருத்துறைப் பூண்டியிலிருந்து சுமார் 15 கி.மீ.
தொலைவு) தரிசிக்கலாம்.

சிற்பக் கலையின் உன்னத சிகரமாக விளங்கும் எட்டுக்குடி
முருகனின் பேரழகையும் பெருஞ்சிறப்பையும் அறிந்த முத்தரச
மன்னன் சிற்பியின் இரு கண்களையும் பறித்து விடுமாறு
உத்தரவிட்டானாம்.

இரு கண்களையும் வலக்கை கட்டை விரலையும் இழந்த போதிலும்
கூட சிற்பி மனம் தளரவில்லை. வன்னி மரங்கள் அடர்ந்த வனத்தில்
ஒரு பாறையைத்தொட்டுப் பார்த்தபோது அது உத்தமமான கல்லாக
இருப்பது கண்டு,
ஒரு சிறுமியின் உதவியோடு அந்த கருங்கல்லில் ஆறுமுகன் மயில்
மீது அமர்ந்த கோலத்தில் ஓர் அற்புத சிலையை உருவாக்கினார்.

முருகனைப் பிரார்த்தித்துக்கொண்டு ஆறுமுகனுக்கு கண் திறக்கும்
தருணத்தில் சிற்பிக்கும் பார்வை வந்துவிட்டது.

சிற்பிக்கு பார்வை அருளியது எண்கண் முருகன்!
இத்திருத்தலத்தில் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் கிழக்குநோக்கியும்
மும்மூர்த்திகளில் ஒருவரான பிரம்மனுக்கு உபதேசித் தருளியதால்
மூலவர் ஆறுமுகப் பெருமான் மயில் மீதமர்ந்த கோலத்தில் தெற்கு
நோக்கி சந்நிதி கொண்டிருக்கிறார்.

மூலவர் சந்நிதிக்கு ஞானசபை என்றும் அதன் கீழ்புறம் ஆறுமுகன்
உற்சவர் சந்நிதி தேவசபை என்றும் அழைக்கப்படுகிறது.
அதன் கீழ்புறம் நடராஜர் உற்சவ சந்நிதியும் அன்னை பிரகன்நாயகி
சந்நிதியும் தெற்கு பார்த்த சந்நிதிகளாகவே உள்ளன.

செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமான் இத்தலத்தில் தெற்கு
முகமாக அமர்ந்து காட்சியளிப்பது தனிச்சிறப்பு. செவ்வாய்தோஷ
நிவர்த்தித் தலமாக எண்கண் கருதப்படுகிறது.
கடன் பிரச்னை, சத்ருக்களின் தொல்லை, திருமணத்தடை போன்றவை
இத்தலத்து முருகனை வழிபட நிவர்த்தியாகிறது.

கண்பார்வை குறைந்தவர்கள், கண்நோய் உள்ளவர்கள், பிரதிமாதம்
விசாக நட்சத்திரத்தன்று எண்கண் திருத்தலத்தில் சண்முகார்ச்சனை
செய்து வழிபட கண்பார்வை முழுகுணம் பெறுவது இத்தலத்தின்
குறிப்பிடத்தக்க அற்புதமாகும்.

ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம் போன்றவை சிறப்பாக கொண்டாடப்
படுகிறது.