பொதுஆவுடையார் கோயில் பரக்கலாக்கோட்டை

பொதுஆவுடையார் கோயில் பரக்கலாக்கோட்டை


காலையில் நடை திறந்து, மதியத்திலும் பிறகு மாலையில் திறந்து இரவு பூஜையுடன் சார்த்துவார்கள். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டைக்கு அருகில் உள்ள பரக்கலாக்கோட்டை கிராமத்தில் உள்ள மத்தியபுரீஸ்வரர் என்றும் பொது ஆவுடையார் கோயில் என்றும் அழைக்கப்படும் சிவாலயத்தில் திங்கட்கிழமைகளில் மட்டும் இரவில் நடை திறப்பார்கள். வருடந்தோறும் பொங்கல் நாளில் மட்டும் பகலில் நடை திறந்து, பூஜைகளும் விசேஷங்களுமாக அமர்க்களப்படும்!

வெள்ளால மரத்துக்கு அருகில் அமர்ந்தபடி ஸ்ரீவான்கோபரும் ஸ்ரீமகாகோபரும் சிவபெருமானின் வருகைக்காகக் காத்திருந்தார்கள். சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்த கையுடன் முனிவர்களை சந்தித்தார் ஈசன்.

‘இறைவனை அடைவதற்கு சிறந்த வழி இல்லறமா... துறவறமா?’ என்று இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட... இந்திரனிடம் சென்று விளக்கம் தரும்படி கேட்டனர். ‘முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது’ என்று பதறிப் போன இந்திரன், ‘’தில்லையம்பலத்தானிடம் கேளுங்கள். தக்க பதில் கிடைக்கும்‘’ என்றான்.

அதன்படி இரண்டு முனிவர்களும் சிதம்பரத்துக்குச் சென்று, சிவனாரைப் பணிந்தனர். தங்கள் சந்தேகத்தைச் சொல்லி விளக்கம் அளித்து அருளும்படி வேண்டினர். ‘’நீங்கள் தவம் செய்யும் இடத்தில் வெள்ளால மரம் உள்ளது. அதற்கு அருகில், உறங்கு புளி, உறங்கா புளி என இரண்டு மரங்கள் இருக்கின்றன. அங்கே காத்திருங்கள். அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வருகிறேன்’’ என்று சொல்லி அனுப்பிவைத்தார் ஆடல்வல்லான். இப்போது, சிவனாம் வந்துவிட்டார்.

‘’இல்லறமாக இருந்தாலென்ன, துறவறம் பூண்டால் என்ன? நெறிமுறை பிறழாமல், நேர்மையும் ஒருமித்த மனமும் கொண்டு வாழ்ந்தால் என்னை அடைவது எளிது. இதில் உயர்வு தாழ்வு என்பதற்கெல்லாம் இடமே இல்லை. இரண்டும் இணையானதே!’’ என்று அருளினார் சிவனார்.

இப்படி இரண்டு பேருக்கும் பொதுவாக பதில் உரைத்ததால், பொதுஆவுடையார் என்று அழைக்கப்பட்டார். இரண்டு பேருக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்ப்பு சொல்லியதால், ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்!

‘‘தாங்கள் இங்கிருந்தபடி அருள வேண்டும்‘’ என்று முனிவர்கள் வேண்ட, ‘’அப்படியே ஆகட்டும்‘’ என்ற ஆடல்வல்லான், அந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். இன்றைக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்