பெண்கள் கணவன் பெயரைச் சொன்னால்

முன்பெல்லாம் பெண்கள் கணவன் பெயரைச் சொன்னால், கணவனின் ஆயுள் குறையும் என்று சொல்வார்கள்



. தற்பொழுது இளம் பெண்கள் கணவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதும், வாடா போடா என்று அழைப்பதும், அவன் இவன் என்று மற்றவர்களிடம் சொல்வதும் அதிக அளவில் சகஜமாக உள்ளதே?
தம்பதியருக்குள் வயது வித்தியாசம் குறைந்து வருவதே இதற்கான காரணம். 25 வருடங்களுக்கு முன்பு வரை வரன் பார்க்கும்போது 5 முதல் 10 வயது வித்தியாசம் வரை இருக்கலாம் என்று எண்ணினார்கள். 15 வருடங்களுக்கு முன் 5 முதல் 7 வயது வரை வயது வித்தியாசம் இருக்கலாம் என்று வரன் தேடினார்கள். அது காலப்போக்கில் அப்படியே குறைந்துவிட்டது. 2 வயதுக்கு மேல் வித்தியாசம் இருக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருக்கும் மணப்பெண்களையே தற்போது காணமுடிகிறது.
இன்னும் ஒருபடி மேலே போய் ஒரே வயது இருந்தாலும் பரவாயில்லை, அல்லது மணமகன் 1 வருடம் வரை இளையவனாக இருந்தாலும் பரவாயில்லை, நன்றாக சம்பாதிப்பவனாகவும், வெளித்தோற்றத்திற்கு அழகானவனாகவும் இருந்தால் போதும் என்று கண்டிஷன் போடும் பெண்களையும் தற்போது வெகுவாகக் காண முடிகிறது. ஒத்த வயதுடைய ஆண்மகனை நண்பனாக எண்ணி நீங்கள் சொல்வது போல் பெயரிட்டு அழைக்கிறார்கள். இது நமது இந்தியக் கலாசாரத்திற்கு உகந்தது அல்ல. இதனை பெண்ணுரிமை என்று தவறாக எண்ணி பெருமை பேசுபவர்களும் உண்டு.
மருத்துவ உலகம் கூட இந்தக் கருத்தினை ஏற்றுக்கொள்வதில்லை. உடற்கூறியல் ரீதியாக மட்டுமன்றி, உளவியல் ரீதியாகவும் திருமணம் செய்து கொள்ளப்போகும் மணமக்களில் ஆண்மகனை விட பெண்ணானவள் 2 முதல் 5 வயது வரை குறைந்தவளாகவே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் தாம்பத்தியமும் சிறக்கும், குழந்தை பிறப்பிலும் எவ்விதமான பிரச்னையும் இருக்காது.
இந்த நியதிக்கு மாறாக நடந்துகொள்வதால்தான் பெரும்பாலான குடும்பங்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றன. கணவனை பெயரிட்டு அழைப்பதைபெண்ணுரிமை என்று கருதுவது பேதமை. கணவனை பெயரிட்டு அழைப்பது என்பது சாஸ்திர விரோதம். உங்களுடைய வருத்தம் நியாயமானதே.