தீய கிரகங்கள் வலிமை அடைகின்றனவா

தீய கிரகங்கள் வலிமை அடைகின்றனவா

-ஆன்மீக கேள்வி பதில்கள் !!!
‪#‎தற்காலத்தில்‬ ஆன்மிகம் என்பது வீண் பகட்டு ஜம்பம் நிறைந்ததாக ஆகிவிட்டதே! வீண் பெருமைக்காக ஆன்மிகத்தில் ஈடுபடுவது பலனைத் தருமா? உள்ளூரில் உள்ள கோயிலுக்கு ஒரு நாளும் செல்லாதவன் சபரிமலைக்குச் செல்வது மட்டும் பலன் தருமா? குலதெய்வ வழிபாட்டினை மறந்து குடும்பத்தோடு கோயில், கோயிலாக சுற்றுவதால் குலம் விருத்தியடையுமா?
உங்கள் வார்த்தைகளில் உள்ள கடுமை சுட்டாலும் அதில் உண்மை இருக்கத்தானே செய்கிறது! ஆன்மிகம் ஒருபுறம் வளர்ந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும் மக்கள் பக்தி மார்க்கத்தில் சரியாகத்தான் பயணித்துக் கொண்டிருக்கிறார்களா என்பதையும் யோசிக்க வேண்டி இருக்கிறது. நிறைய பேர் கொஞ்சம், கொஞ்சமாக தங்களது குலதெய்வத்தின் பெயரைக் கூட மறந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. தங்கள் குடும்பத்தின் ஜாதகங்களை எடுத்துக்கொண்டு எங்கள் குலதெய்வம் எது என்று கூறமுடியுமா என்று ஜோதிடர்களிடம் கேட்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
மறுபுறம் குலதெய்வத்தின் பெயரைத் தெரிந்துகொண்டு அது எங்கிருக்கிறது என்று பல வழிகளிலும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அலைபவர்களின் எண்ணிக்கை நாளாக, நாளாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஐயப்ப குருசாமி ஒருவர் தனது குடும்பத்தினரின் ஜாதகங்களை எடுத்துக்கொண்டு வந்திருந்தார். தான் தொடர்ந்து 35 வருடங்களாக சபரிமலைக்கு சென்று வருவதாகவும், ஆயினும் ஐயப்பன் தன்னை மிகுந்த சோதனைக்குள்ளாக்குவதாகவும் வருத்தத்தோடு கூறினார்.
வீட்டில் பிள்ளைகளுக்கு திருமணம் நடைபெறாமல் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டிருக்கிறது என்பதே அவரது மனக்குறை. வாஸ்து சாஸ்திரம் பார்த்துதான் வீட்டைக்கூட கட்டியிருப்பதாகவும், பிள்ளைகளின் ஜாதக வலிமை நல்லநிலையில் இருந்தும் கூட திருமணம் மட்டும் கூடி வரவில்லை என்றார். குலதெய்வத்தின் கோயிலுக்கு போய் எத்தனை வருஷம் ஆச்சு என்று கேட்டதற்கு “அது எங்க போறது சாமி! எங்கயோ கிராமத்துல ஒரு மூலைல இருக்கு, போலாம்னா பங்காளிங்க ஒண்ணு சேரமாட்டேங்கறாங்க” என்றார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் குலதெய்வம், வீட்டு தெய்வம், கிராம தேவதை என்றெல்லாம் முன்னோர்கள் வகுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். காலதேச மாறுபாட்டில் ஒவ்வொரு குடும்பமும் பிழைப்பிற்காக ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் வீட்டில் உள்ள பெரியவர்களின் துணையுடன் குலதெய்வ வழிபாட்டினை வருடாவருடம் செய்ய வேண்டியதும் அவசியம். இல்லாவிட்டால் வாரிசுக் குழந்தைகளின் ஜாதகங்களில் குறை நேருவதைத் தவிர்க்க இயலாது. எத்தனையோ ஜாதகங்களில் குலதெய்வ வழிபாடு குறையாக உள்ளது என்று ஜோதிடர்கள் சொல்லக் கேள்விப்படுகிறோம்.
ஜாதகத்தை வைத்து இதையெல்லாம் நிச்சயமாக சொல்ல முடியும். குலதெய்வமும் நம் குடும்பத்து உறுப்பினர்தான். நமக்கெல்லாம் ஒரு வருடம் என்பது தெய்வங்களைப் பொறுத்த வரை ஒருநாள் மட்டுமே. அந்த ஒருநாளிற்கு உரிய ஆகாரத்தை நாம் அந்த தெய்வத்திற்கு வழங்க வேண்டாமா? நம்மைக் காத்து வரும் அந்த தெய்வத்தினை பட்டினி போடலாமா? அலட்சியமாக நடந்துகொள்வதால்தான் பரம்பரையில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்திலும், உடல் உறுப்புகளின் வளர்ச்சியிலும், பொதுவாகப் பொருளாதாரத்திலும் குறைகளைக் காண்கிறோம்.
அந்தக் காலத்தில் எல்லோரும் ஒன்றாக இணைந்து நல்ல விசேஷங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக பங்காளிகள் ஒன்றிணைந்து குலதெய்வக் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று விதிமுறைகளை வகுத்திருந்தார்கள். ஆனால், இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. பங்காளிகள் ஒன்றிணைந்து கோயிலுக்குப் போவதெல்லாம் அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதை ஒரு சாக்காகக் கொள்ளாமல் வருடத்திற்கு ஒருமுறையாவது குலதெய்வ வழிபாட்டினை சிரத்தையுடன் செய்ய வேண்டியது அவசியம். வாழ்க்கை நிலையில் நிச்சயம் முன்னேற்றத் தினைக் காண முடியும்.
ஒரு தமிழ்த் திரைப்படத்தில் “சாமியை உள்ளே வச்சிகிட்டு வெளிய தேடுறாங்கய்யா!” என்று பிரபல நடிகர் தத்துவ வசனம் பேசுவார். சத்தியமான வார்த்தைகள் அவை. கையில் பணம் இல்லாவிட்டால் கூட வருடா வருடம் சபரிமலைக்குப் போவது மாதிரிஅந்த தெய்வத்துக்கு எந்த முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அதே முக்கியத்துவத்தை குலதெய்வ வழிபாட்டிற்கும், நாம் வசித்து வரும் பகுதியில் கவனிப்பாரற்று கிடக்கும் ஆலயங்களில் உள்ள தெய்வங்களுக்கும் அளிக்க வேண்டும்.
அதே போன்று காவல் தெய்வங்களாகிய மாரியம்மன், அய்யனார் போன்ற கிராம தேவதைகளையும் அவ்வப்போது ஆராதனை செய்து வருவது நல்லது. தெய்வ சக்திகள் எழுச்சி பெறும்போது தீய சக்திகளின் வலிமை குறைந்து நாடும், வீடும் நலம் பெறும், நாமும் எல்லா வளங்களையும் பெற்று வாழ்வோம் என்பதில் ஐயம் இல்லை.
‪#‎வீட்டில்‬ எந்த இடத்தில் தெய்வங்களின் படங்களை ஒட்டலாம் எந்த இடத்தில் ஒட்டக்கூடாது?
இறைவன் தூணிலும் இருக்கிறான், துரும்பிலும் இருக்கிறான் என்பதே அடிப்படை உண்மை. ஆயினும் தெய்வத்தின் உருவத்தினைக் கண்டால் மட்டுமே நமக்குள் பக்தி உருவாகிறது. அவ்வாறு பழகிவிட்டோம். படுக்கையறை, குளியலறை, கழிப்பறை முதலான இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் தெய்வங்களின் படங்களை ஒட்டலாம். சுவரெல்லாம் தெய்வத்தின் படங்களை ஒட்டுவதை விட அந்த தெய்வத்தின் உருவத்தை மனதிற்குள் பதிய வைத்துக்கொள்வதே உண்மையான பக்தியின் அடையாளம்.
‪#‎ஆன்மிகம்‬ என்பது பலனுக்கா, பக்குவத்திற்கா, பரமபதத்திற்கா?
பக்குவத்தின் மூலம் பரமபதம் எனும் பலனை அடைவதற்கான பாதையே ஆன்மிகம். இறை நம்பிக்கையே அறியாமை எனும் இருளைப் போக்குகிறது. அறியாமை அகலும்போது மனம் பக்குவப்படுகிறது. பக்குவப்பட்ட மனம் இன்பம், துன்பம் இரண்டையும் ஒன்றாகவே காண்கிறது. மனம் பக்குவப்படுவதற்கு ஆன்மிகம் அவசியமாகிறது. சுருங்கச் சொன்னால் ஆன்மிகமே இந்த உலகத்தினை ஆள்கிறது. ஆன்மிகம் இல்லையேல் இந்த உலகமே அழிந்துபோகும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.
‪#‎நாட்டில்‬ கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றனவே, சுபகிரஹங்களின் வலிமை குறைந்து தீய கிரஹங்கள் வலிமையடைகின்றனவா? இதே நிலை தொடர்ந்தால் மனிதனை மனிதன் அடித்துச் சாப்பிட வேண்டியதுதானா..இதனைத் தடுக்க வழி இல்லையா?
பெரும்பாலோர் பணத்தை, வருமானத்தைத் துரத்திக்கொண்டு ஓடுகிறார்கள். பணம் மனித சமுதாயத்தை எவ்வாறெல்லாம் பாடாய்ப்படுத்துகிறது! மனித நேயத்தையே உருத்தெரியாமல் குலைத்துவிட்டது. பணத்திற்காக குழந்தைகளைக் கடத்திக் கொல்கிறார்கள், பணத்திற்காக பட்டப்பகலில் வீடுகளில் புகுந்து கொள்ளை அடிக்கிறார்கள், அரசியல் மட்டுமல்லாது, விவசாயத்திலிருந்து சாப்ட்வேர் கம்பெனி வரை சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் பணம் பிரதானமான இடத்தைப் பிடித்துக்கொள்ள அதனால் அன்றாடம்ஊழல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு நாளும் இதுபோன்ற கிரைம் செய்திகளின் முகத்தில்தான் விழிக்கிறோம், அவற்றோடுதான் வாழ்கிறோம்! இன்றைய உலகில் யாருக்கும் பொறுமை என்பதே இல்லை. இது எக்ஸ்பிரஸ் உலகமாக மாறிவிட்டது. வேகமாக முன்னேற வேண்டும், வேகமாக பலன்களை அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் பலருடைய ஆழ் மனதில் வேரூன்றிவிட்டது ஆனால், இதுபற்றி யாரும் பெரிதாக கவலைப்படுவதில்லை.
சாமானியர்களுக்கும், வாழ்க்கையில் பணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் போய்விட்டது. இன்னும் நூறு ஆண்டுகள் கழித்து நமது கொள்ளுப் பேரன்களும், எள்ளுப் பேத்திகளும் நம்வரலாற்றினைப் படிக்கையில் மிகவும் மோசமான காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்திருப்பதை அறிந்து அவர்கள் எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்பதை இப்போதே உணரவேண்டியது மிகவும் அவசியம். திரைப்படங்கள், மீடியாக்கள் என மக்களை எளிதாகச் சென்றடையும் துறைகளிலும் ஏகப்பட்ட வன்முறைக் காட்சிகள். மக்கள் இதைத்தான் ரசிக்கிறார்களா? ஏன் இந்த நிலை? கிரஹங்களின் கோளாறா, அசுப கிரஹங்கள் வலிமை அடைகின்றனவா அல்லது எல்லோரும் சொல்வது போல் கலி முற்றிவிட்டதா, என்பதே உங்கள் வருத்தமாக இருக்கிறது.
ஜோதிட ரீதியாக ஆய்வில் இறங்கும்ோது ஓர் உண்மை புலப்படுகிறது. கிரஹங்களின் கதிர்கள் எவ்வாறு மனிதனைத் தாக்கி அவனுள் மாற்றத்தை உண்டு செய்கிறதோ அதே போல, மனிதர்களின் நல்ல மற்றும் தீய எண்ணங்களும் கூட கிரஹங்களை வலிமையுறச் செய்கிறது. அதாவது நல்ல எண்ணங்கள் பெருகும்போது சுபகிரஹங்களும், தீய எண்ணங்கள் பெருகும்போது அசுபகிரஹங்களும் வலிமை பெறுகின்றன. இது மனிதர்களுக்கும், கிரஹங்களுக்கும் இடையே ஒரு போராகவே நடந்துகொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
For every action there is an equal and opposite reaction என்ற நியூட்டனின் மூன்றாம் விதியைப் போல், நாம் நடந்துகொள்கிற விதம் கிரஹங்களையும் வலிமை பெறச் செய்கிறது. எவ்வாறு அவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு நம்மீது தாக்கத்தினை ஏற்படுத்துகிறதோ அதேபோன்று பூமியிலிருந்து வெளிப்படும் எண்ண அலைகளும், அதிர்வலைகளும் நம்மை ஆளும் கிரஹங்களின் மீதும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
நல்ல எண்ணங்களின் விகிதாச்சாரம் குறைவாக இருப்பதால் சுப கிரஹங்கள் வலுக்குறைந்தும், தீய எண்ணங்களின் விகிதம் அதிகமாக இருப்பதால் தீய கிரஹங்கள் வலுப்பெற்றும் காணப்படுகின்றன. தற்காலத்தில் சூரியன், செவ்வாய், சனி போன்ற தீய கிரஹங்கள் மிகுந்த வலிமையுடனும், சுப கிரஹங்களான புதன், குரு, சுக்கிரன் போன்றோர் வலுக்குறைந்தும் பணியாற்றுகிறார்கள். நாம் இயற்கைக்கு மாறாக பல காரியங்களைச் செய்யப் பழகிக்கொண்டுவிட்டோம்.
வளர்ச்சிப் பாதையில் செல்வதாக நினைத்து எல்லாத்துறைகளிலும் இயற்கையின் நியதிக்கு மாறாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். அறிவியல் வளர்ச்சிகள் ஆக்கப் பூர்வமாக ஒரு சில விஷயங்களில் இருந்தாலும் கூட பல விஷயங்களில் எதிரான பலன்களைத் தருவதாகவே அமைகிறது. கலியுகம் என்பது ராகுவின் உலகம், ராகு கிரஹம் தான் செய்த தவறினை ஒப்புக்கொள்ளாது, அதனை நியாயப்படுத்தப் பார்க்கும். ஆண்டி முதல் அரசியல்வாதிவரை, தான் செய்த தவறினை ஒப்புக்கொள்ளாது அதை சட்டபூர்வமாக நியாயப்படுத்தவும், அதே நேரத்தில் தான் தப்பிக்க பழியினை மற்றொருவர் மேல் போடுவதுமாக செயல்படுவது இவ்வுலகில் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.
ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். இந்த எண்ணம் மனிதர்களுக்குள் அதிகரிக்க அதிகரிக்க ராகுவின் வலிமையும் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதே நிலை தொடரும் பட்சத்தில் இன்றைய அநியாயங்களை விட இன்னும் பல கொடுமையான நிகழ்வுகளையும் காணத்தான் போகிறோம். நமக்குள் நல்ல எண்ணங்களையும், நல்ல சிந்தனைகளையும் வளர்த்தோமேயாயின் அந்த எண்ணங்களின் அதிர்வலையானது சுபகிரஹங்களின் வலிமையைக் கூட்டி உலகத்தில் நன்மையை விளைவிக்கும் என்பதை உணர்வோம்.
நாட்டில் நடக்கும் கொடுமைகளைக் கண்டு வீட்டிற்குள் மனம் புழுங்காது, ஒருமித்த எண்ணம் உடைய நல்லோர்கள் ஒன்றாக இணையலாம். சத்சங்கங்கள் பெருகட்டும். ஜாதி, மத, இன பேதமின்றி ஆங்காங்கே உள்ள ஆலயங்களில் கூட்டுப்பிரார்த்தனைகளை நடத்துவோம். குறைந்தபட்சமாக ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாலை நேரத்தில் மட்டுமாவது தொலைக்காட்சிப் பெட்டிக்கு ஒதுக்கும் நேரத்தை அடுத்த தலைமுறையின் நன்மைக்காக ஒதுக்கிவைத்து, உலக நன்மையை வேண்டி அருகில் உள்ள ஆலயங்களில் விளக்குகளை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்வோம். ஒன்று படுவோம்! வளம் பெறுவோம்!
‪#‎முன்னோர்‬ வழிபாடு என்பது அவர்களுக்கும், அவர்களது பிள்ளைகளுக்கும் பலன் தருமா?
நிச்சயமாக. முன்னோர் வழிபாடு என்பது வங்கியில் செய்யும் டெப்பாசிட் போல. வட்டியும் முதலுமாகச் சேர்த்து சிறப்பான லாபத்தினை அனுபவிக்க முடியும். அதே நேரத்தில் பித்ரு கர்மாக்களை சரிவரச் செய்யாதவன் வங்கியில் கடன் வாங்கியவன் ஆகிறான். கடன்தொகையை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தாதவன் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறான். சொத்தும் ஏலத்திற்கு வந்து பிள்ளைகள் உட்பட குடும்பத்தினர் அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
அதே நேரத்தில் முன்னோர் வழிபாட்டினைச் சரிவரச் செய்து வருபவன் பிள்ளைகளோடு ஆனந்தமாய் வாழ்கிறான். இந்த உண்மையினை அனுபவ பூர்வமாக நடைமுறை வாழ்க்கையில் காண இயலும். முன்னோர் வழிபாட்டிற்காகச் செய்யும் செலவிற்கு கணக்கு பார்க்கக் கூடாது. பித்ரு கர்மாக்களுக்காக செலவழிக்கும் தொகையானது வட்டியும், முதலுமாக நமக்குத் திரும்பக் கிடைத்துவிடும் என்பது நிதர்சனமான உண்மை