மேடைகளில் குத்துவிளக்கினை மெழுகுவர்த்தி கொண்டு ஏற்றுகிறார்களே.

பிரமாண்டமான விழா மேடைகளில் ஆளுயுரக் குத்துவிளக்கினை

மெழுகுவர்த்தி கொண்டு ஏற்றுகிறார்களே... இது சரியா? அதற்கு பதில் தீபாவளி சமயத்தில் உபயோகப்படுத்துவது போலான நீண்ட தீக்குச்சிகளைக் கொண்டு ஏற்றலாமே?
- க.விஜயலக்ஷ்மி, மேடவாக்கம்.
குத்துவிளக்கு ஏற்றி விழாவினைத் துவக்கு வது என்பது நம் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் செயல். அரசியல், இலக்கியம், சமயம் சார்ந்த விழாக்கள் ஆகட்டும் அல்லது வியாபார ரீதியான விழாக்கள் ஆகட்டும், எதுவாகிலும் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினைத் துவக்குவது என்பதைத் தற்போது பரவலாகக் காணமுடிகிறது. இந்த நவீன யுகத்திலும், நமது கலாசாரத்தைக் கட்டிக் காக்கின்ற இது போன்ற நிகழ்வுகளை அவசியம் பாராட்டியே ஆக வேண்டும்.
இதனை மெழுகுவர்த்தி கொண்டு ஏற்றுகிறார்களே, சரியா என்று கேட்டிருக்கிறீர்கள். மெழுகுவர்த்தி என்றதும் உங்கள் மனதில் கிறித்துவ மதம் நினைவிற்கு வரு
கிறது என்று எண்ணுகிறேன். குத்துவிளக்கு என்பது இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானது என்பதும், மெழுகுவர்த்தி என்பது கிறித்துவ மதத்திற்கு மட்டுமே உரியது என்பதும் முற்றிலும் தவறான கருத்து.
இது உங்கள் அறியாமையையே காட்டுகிறது. நம் வீட்டிலும் சரி, ஆலயத்திலும் சரி விளக்கு ஏற்றுவதற்கு தீக்குச்சிகளையே பெரும்பாலும் பயன்படுத்துகிறோம்.
தீக்குச்சியின் தலையில் வைக்கப்பட்டுள்ள ‘பாஸ்பரஸ்’ எனும் வேதிப்பொருள் உராய்வு கொள்ளும்போது நெருப்பு என்பது உண்டாகிறது. மெழுகு என்பது இயற்கையாக பூமிக்கு அடியில் கிடைக்கின்ற பெட்ரோலிய பொருட்களை பலமுறை வடிகட்டி, சுத்திகரிப்பதால் கிடைப்பது. ஆக, மெழுகு வர்த்தி என்பதும் சுத்தமான பொருளே ஆகும். அந்நிய தேசத்தவர்க்கு மெழுகு அதிக அளவில் எளிதாகக் கிடைத்தது.
நம் இந்தியத் திருநாட்டில் எள், ஆமணக்கு முதலான தாவரங்களிலிருந்து எண்ணெய் எளிதாகக் கிடைத்தது. நமக்கு்க் கிடைத்த பொருளைக் கொண்டு விளக்கேற்றி நாம் இறைவனை வழிபட்டோம். அவர்களுக்கு கிடைத்த பொருளில் விளக்கேற்றி அவர்கள் இறைவனை வழிபட்டார்கள். ஆக, குத்துவிளக்கு என்பதும், மெழுகுவர்த்தி என்பதும் காலம் மற்றும் தேசத்தின் அடிப்படையில் உண்டான மாறுபாடுதானே தவிர, மதத்தின் அடிப்படையில் தோன்றிய மாறுபாடு கிடையாது.
எரிவது குத்துவிளக்கா, மெழுகுவர்த்தியா என்பது முக்கியமல்ல, நம் மனதில் அஞ்ஞானம் என்ற இருட்டு மறைந்து, மெய்ஞானம் என்ற உண்மையான அறிவுச்சுடர் ஒளிவீச வேண்டும்என்பதே அதில் பொதிந்துள்ள உண்மையான கருத்து. அதற்காக குத்துவிளக்கில் மின்சார பல்புகளை ஒளிரவிடுவது தவறான செயல். ஆகவே மெழுகுவர்த்தியைக் கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவினைத் துவக்குவதில் எந்தத் தவறும் இல்லை.