எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்?

எந்தெந்த கோயிலில் என்னென்ன பிரசாதம்?

இங்கே நாம் வகைவகையாக, நமக்குப் பிடித்த உணவுவகைகளைத் தயாரித்து இறைவனுக்குப் படைக்கிறோம். ஆனால், கோயில்களில் நிவேதிக்கப்படும் உணவு வகைகள் அந்தந்த கோயிலுக்கென்றே உரித்தான ஒழுங்குமுறைப்படி தயாரிக்கப்படுகின்றன. அந்த வகையில் எந்தெந்த கோயில்களில் என்னென்ன பிரசாதங்கள் என்று பார்க்கலாமா?
> ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ரங்கநாதருக்கு தேங்காய்த் துருவலும் துலுக்க நாச்சியாருக்கு ரொட்டி, வெண்ணெய், கீரையும் நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. தினமும் இரவில் அரவணை பிரசாதமும் உண்டு.> திருவாரூர் தியாகராஜப் பெருமானுக்கு நெய்யில் பொறிக்கப்பட்ட முறுக்கு தினசரி பிரசாதம்.
> திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாளுக்கு தினமும் இரவில் முனியோதரயன் பொங்கல் எனும் அமுது செய்விக்கப்படுகிறது.
> காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு சுக்கு, மிளகு, கறிவேப்பிலை மணத்துடன் கூடிய காஞ்சிபுரம் இட்லிதான் முதல் நைவேத்யம்.
> திருப்பதி வெங்கடாஜலபதிக்கு விதவிதமான பிரசாதங்கள் செய்யப்பட்டாலும் குலசேகரன்படியைத் தாண்டி மண் சட்டியில் நிவேதிக்கப்படுவது தயிர்சாதம் மட்டுமே.
> கேரள மாநிலம் கொட்டாரக்கராவில் விநாயகப் பெருமானுக்கு சுடச்சுட நெய்யப்பம் செய்து நிவேதித்துக் கொண்டே இருக்கின்றனர். உதயம் முதல் அஸ்தமனம் வரை
அப்பம் ஏற்கும் கணபதி இவர்.
> முஷ்ணம் பூவராக மூர்த்திக்கு தினமும் அபிஷேகத்திற்குப் பிறகு முக்தாபி சூரணம் எனும் மகா பிரசாதம் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்த பிரசாதம் நோய்களை
தீர்க்கும் மருந்தாகக் கருதப்படுகிறது.
> கேரளம், திருவிழா மகாதேவர் ஆலயத்தில் மூலிகைகளைச் சாறு பிழிந்து பாலுடன் கலந்து ஈசனுக்கு நிவேதனம் செய்து பின் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கின்றனர். இந்த பால் வயிற்றுக் கோளாறுகளைத் தீர்க்கிறது.
> நவகிரக, சுக்கிர தலமான கஞ்சனூரில் அன்னாபிஷேகத்தின் போது சுரைக்காய் பிரசாதம் படைக்கப்படுகிறது.
> குற்றாலம் குற்றாலநாதருக்கும், அம்பிகை குழல்வாய்மொழி அம்மைக்கும் நாள்தோறும் சுக்கு, மிளகு சேர்த்த கஷாயம் படைக்கப்படுகிறது. அருவியால், இருவருக்கும் தலைவலியும் ஜலதோஷமும் வராமல் இருக்கவே இந்த ஏற்பாடு!
> முழு உளுந்தை ஊறவைத்து பச்சரிசி மாவுடன் மிளகு, சீரகம் சேர்த்து நெய் ஊற்றித் தயாரிக்கப்படும் தோசை, மதுரை அழகர் கோயிலின் பிரதான பிரசாதம்.
> திருநெல்வேலி பூமாதேவி அம்மன் ஆலயத்தில் தமிழ் மாதக் கடைசி வெள்ளியன்று கூட்டாஞ்சோறும் சர்க்கரைப் பொங்கலும் நிவேதனம் செய்வர். துவரம்பருப்பு, அரிசி, காய்கறிகள் எல்லாம் சேர்த்து தேங்காய் அரைத்து போட்டு தயாரிக்கப்படுவதுதான் கூட்டாஞ்சோறு.
> சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு கிச்சடி சம்பா சாதமும் சிதம்பரம் கொத்சும் சிறப்பான நிவேதனங்கள்.
> எர்ணாகுளம் கூத்தாட்டுக்குளம்
நெல்லிக்காட்டு பகவதி ஆலயத்தில் மருந்து பிரசாதமாக வழங்கப்படுகிறது. விசேஷமாக நவராத்திரி நாட்களில் தங்கம் கலந்தும் வழங்கப்படுகிறதாம்!
> திருச்சி வெக்காளியம்மன் கோயிலுக்கு முந்தைய பஸ் ஸ்டாப்பில் உள்ள ஜெய காளிகாம்பாள் கோயிலில் வெள்ளிதோறும் ராகுகாலத்தில் துர்க்கைக்கு இஞ்சிச் சாறும், தேனும் கலந்து அபிஷேகம் செய்து, பிரசாதமாக வழங்குகிறார்கள். இதனைக் குழந்தையின் நாவில் தடவினால், வாய் பேசாத குழந்தையும் சில நாட்களில் பேசத் துவங்கிவிடும்.
> உறையூர் கமலவல்லி சமேத அழகிய மணவாளர் ஆலயத்தில் குங்கும பிரசாதத்திற்குப் பதில் சந்தன பிரசாதமே தரப்படுகிறது. இதை உட்கொள்ளலாம். மேலும் நிவேதனங்களில் காரத்திற்காக மிளகாய் வற்றல் சேர்க்கப்படாமல் மிளகு சேர்க்கப்படுகிறது.